யோக சூத்திர பதஞ்சலியும் தில்லையில் மன்று தொழுத பதஞ்சலியும் ஒருவரா?

பதஞ்சலி என்ற பெயர் இந்து ஞான மரபில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஞானிகளுடன் தொடர்புடையது. இவர்கள் அனைவரும் ஒரே நபரா அல்லது வேறு வேறானவர்களா என்பதில் பாரம்பரிய மரபுக்கும் மற்றும் நவீன வரலாற்று ஆய்வுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் நிலவுகின்றன.

குறிப்பாகத் தமிழகத்தில் பல சிவன் கோயில்களில், தில்லை (சிதம்பரம்) உள்பட, நடராஜர் சன்னிதி முன்பாக இரண்டு முனிவர்களின் சிலைகள் வணங்கிய கோலத்தில் காணப்படும். அவர்களில் ஒருவர் மன்று தொழுத பதஞ்சலி முனிவர்; இன்னொருவர் வியாக்ர பாதர் (புலிப்பாதர்). இந்தச் சிவ ஞானியான பதஞ்சலி முனிவரையும், யோக சூத்திரம் எழுதிய பதஞ்சலி முனிவரையும் ஒருவரே என குழப்பிக் கொள்வது பலரிடத்திலும் உண்டு.

தமிழகத்தின் பல பகுதிகளில் பழங்காலச் சிவன் கோயில்களில் பதஞ்சலி சமாதி எனக் கூறப்படும் இடங்கள் உண்டு (உதாரணமாக, திருப்பட்டூர், இராமேஸ்வரம்). இந்த இடங்கள் சிவ ஞானியான பதஞ்சலி முனிவர் நிர்விகல்ப சமாதி தியானமியற்றிய இடங்களாக இருக்கலாம்.

இது தவிர, இலக்கண நூலும், ஆயுர்வேத நூலும் இயற்றியவர்களின் பெயரும் பதஞ்சலியே ஆகும்.

இவர்கள் வேறு வேறு நபர்கள் என்பதை கால அடிப்படையிலும் தத்துவ அடிப்படையிலும் தெளிவாகப் பார்க்கலாம்.

யோக சூத்திரம் இயற்றிய பதஞ்சலியும், தில்லையில் நடராஜரை வழிபட்ட பதஞ்சலியும் ஒருவர் அல்ல என்று கூறப்படுவதற்கு முதன்மையான காரணம், அவர்கள் சார்ந்திருக்கும் தத்துவப் பின்னணிகளில் உள்ள அடிப்படையான முரண்பாடுகளே ஆகும்.

  • நூல்: யோக சூத்திரங்கள்.
  • காலம்: இதன் காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது இலக்கணவாதியின் காலத்துக்குப் பிந்தையது (பொ.யு. 2–4 ஆம் நூற்றாண்டு) என்று கருதப்பட்டாலும், பலர் இதை இலக்கணவாதியின் காலத்தோடு ஒட்டியே (பொ.மு. 2-ஆம் நூற்றாண்டு) இருக்கக்கூடும் என்றும் வாதிடுகிறார்கள். (சாங்கிய – யோக மரபுகள் 3000 ஆண்டுகளாக பயிலப்பட்டு வரும் ஒரு மரபாக கருதப்படுகிறது)
  • தத்துவ பின்புலம்: யோக சூத்திர மரபு ஈஸ்வர சாங்கியம் மற்றும் யோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில், கடவுள் (ஈஸ்வரன்) என்பது ஒரு விசேஷ புருஷராக மட்டுமே வரையறுக்கப்படுகிறது.
  • ஈஸ்வரனின் பங்கு: ஈஸ்வரத் தன்மை உலகைப் படைப்பவராகவோ, காப்பவராகவோ கருதப்படவில்லை. மாறாக, யோகப் பயிற்சியின் இலக்கான கைவல்யம் (விடுதலை) அடைய, அட்டாங்க யோக முறையை விளக்கி, அதன் நியமங்களில் ஒன்றாக ஈஸ்வர பிராணிதானம் (விசேஷ புருஷனிடம் சரணடைதல்) சுட்டப்படுகிறது. இது பக்தியோ வழிபாடோ அல்ல. சைவ சித்தாந்தத்தில் உள்ளதைப் போல, குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை முழுமுதற் கடவுளாக ஆராதிக்கவில்லை.
  • தில்லைச் சபையில் (மன்று) நடராஜரை வழிபட்டவர்.
  • தத்துவ பின்புலம்: இவர் சைவ சித்தாந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இங்கு சிவபெருமானே அண்டத்தின் முழுமுதல் கடவுளாகவும், படைத்தல், காத்தல் உள்ளிட்ட ஐந்தொழில்களைச் செய்பவராகவும் வழிபடப்படுகிறார்.
  • கோவில் புராணங்களின்படி, பதஞ்சலியார் பரம சிவனான நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு அருள் பெற்றவராகக் காட்டப்படுகிறார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார் போன்ற பல புராணக் கதைகள் இவர் சார்ந்தவை.

ஒரு துறையில் குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டுக் கூறுகள் இல்லாதிருப்பதும், மற்றொன்றில் முழுமுதற் கடவுளாகச் சிவபெருமானை ஆராதிப்பதும், இவர்கள் வெவ்வேறு ஆன்மீகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.

பதஞ்சலி என்ற பெயருடன் இணைக்கப்பட்ட மூன்று முக்கியப் படைப்புகளின் கால வேறுபாடுகளே இவர்கள் வேறு வேறு நபர்கள் என்று வரலாற்று அறிஞர்கள் வாதிடக் காரணம்.

பதஞ்சலியின் அடையாளம்முக்கியப் படைப்பு / துறைகாலம் (வரலாற்று ரீதியானது)நிலை / வேறுபாடு
இலக்கணவாதிமகாபாஷ்யம் (சமஸ்கிருத இலக்கணம்)பொ.மு. 2-ஆம் நூற்றாண்டு (சுமார் பொ மு .150 )இதன் காலம் உறுதியானது; யோக சூத்திர ஆசிரியரை விடப் பல ஆண்டுகள் முந்தையவர்.
யோக சூத்திர ஆசிரியர்யோக சூத்திரங்கள்சில அறிஞர்கள் பொயு 2–4ஆம் நூற்றாண்டு எனக் கூறினாலும்,
நவீன ஆராய்ச்சிகள் பெரும்பாலும் பொ.மு. 150–100-க்கு இணைக்கின்றன
இலக்கணவாதியிடமிருந்து மொழிநடை, இலக்கணம் மற்றும் காலத்தால் வேறுபட்டவர்.
ஆயுர்வேத நூலாசிரியர்(மருத்துவச் சூத்திரங்கள்)துல்லியமான சான்றுகள் இல்லைஇலக்கணம், யோகம், மருத்துவம் ஆகிய மூன்றையும் ஒரே நபர் எழுதியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

பிற்காலப் பாடல் ஒன்று, மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றுக்கும் இவரே நூல்கள் எழுதியவர் என இலக்கணம், யோகம், மருத்துவம் ஆகிய துறைகளை ஒருவரே எழுதியதாகப் போற்றுகிறது. ஆயினும், சைவ சித்தாந்தப் பதஞ்சலியார் இவரிடமிருந்து வேறுபட்ட ஒருவர் என்ற கருத்தே வலுப்பெறுகிறது.

திருமூலர் தனது திருமந்திரத்தில், நந்தி தேவரிடம் உபதேசம் பெற்ற எட்டுச் சீடர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:

(திருமந்திரம் – பாடல் 67)

இந்த மரபில் கூறப்படும் எட்டுச் சீடர்களின் பெயர்கள்:

  • சனகர்
  • சனந்தனர்
  • சனத் குமாரர்
  • சனாதனர்
  • சிவயோக மாமுனிவர்
  • பதஞ்சலி (மன்று தொழுதவர்)
  • வியாக்ரபாதர்
  • திருமூலர்
  • இந்தக் கூற்றுப்படி, மன்று தொழுத பதஞ்சலியும், திருமூலரும் ஒரே நந்தி நாத குரு மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • திருமூலரின் காலம் பொதுவாக பொ.யு. 5-ஆம் நூற்றாண்டுக்கும் 9-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த மரபின்படி, மன்று தொழுத பதஞ்சலி முனிவரின் ஆன்மீகக் காலம் திருமூலரின் காலத்தை ஒட்டியதாகவே கருதப்படுகிறது. இதன் மூலம், யோக சூத்திர ஆசிரியர், இலக்கணவாதி ஆகியோரின் காலமும், மன்று தொழுத பதஞ்சலியின் ஆன்மீகக் காலமும் வேறு வேறாகவே இருக்க முடியும் என்று நிரூபணமாகிறது.

வரலாற்று ஆய்வின்படி, காலக் கணிப்பு, மொழிநடை மற்றும் தத்துவப் பின்னணி மாறுபாடுகள் காரணமாக, யோக சூத்திர பதஞ்சலியும் தில்லையில் மன்று தொழுத பதஞ்சலியும் வெவ்வேறு நபர்களாகவே இருக்க முடியும் .


கட்டுரை ஆசிரியர்

திரு.தில்லை செந்தில் பிரபு

Hot this week

“36” (இருள்-வெளி-ஒளி) – 2 – தில்லை செந்தில்பிரபு

நமது முந்தைய அத்தியாயத்தை, "சிந்திப்பதால் நான் இருக்கிறேனா? அல்லது இருப்பதால் சிந்திக்கிறேனா?" என்ற ஆழமான...

“36” (இருள்-வெளி-ஒளி) – தில்லை செந்தில்பிரபு

ஒரு ஞானப் பயணம் குரு பௌர்ணமி நாளன்று, நண்பர் முத்துமாணிக்கம் சைவ சித்தாந்தத்தின்...

நம்மை நாம் மீட்டெடுத்தல் – கே

அன்புள்ள ஜெ நான் உங்கள் தளத்தில் யோகம், தியானம் பற்றி வந்துகொண்டிருக்கும் கடிதங்களை...

தில்லை செந்தில் பிரபு – ஒரு பேட்டி

தில்லை செந்தில்பிரபு அவர்கள் என்னை தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். நான் பொது...

Guru and Grace

  GURU AND GRACE Conversation with Sri Ramana Maharshi     Questioner: What is Guru’s...

சித்தாந்தத்தின் தத்துவங்கள்

“36” (இருள்-வெளி-ஒளி) – 2 – தில்லை செந்தில்பிரபு

நமது முந்தைய அத்தியாயத்தை, "சிந்திப்பதால் நான் இருக்கிறேனா? அல்லது இருப்பதால் சிந்திக்கிறேனா?" என்ற ஆழமான...

“36” (இருள்-வெளி-ஒளி) – தில்லை செந்தில்பிரபு

ஒரு ஞானப் பயணம் குரு பௌர்ணமி நாளன்று, நண்பர் முத்துமாணிக்கம் சைவ சித்தாந்தத்தின்...