நமது முந்தைய அத்தியாயத்தை, “சிந்திப்பதால் நான் இருக்கிறேனா? அல்லது இருப்பதால் சிந்திக்கிறேனா?” என்ற ஆழமான கேள்வியில் இருந்து ஆரம்பித்தோம். அத்துடன், சைவ சித்தாந்தம் எந்தக் காலகட்டத்தில் உருவானது, அது இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்களுடனும் மற்றும் பிற அக/புறச் சமயங்களுடனும் எவ்வாறு இணைகிறது என்பதைப் பார்த்தோம். சித்தாந்தத்தின் மையமான பதி, பசு, பாசம் என்ற மூன்று அடிப்படை உண்மைகளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தினோம்.

இந்த அத்தியாயத்தில் இருந்து, சைவ சித்தாந்தத்தின் நுண்ணிய தத்துவங்களை ஆழமாகச் சிந்திக்கப் போகிறோம். சித்தாந்தத்தின் அடித்தளமாக விளங்கும் ‘முப்பொருள்களின்’ (பதி, பசு, பாசம்) உண்மை இயல்பை ஆராய, நாம் ஓர் உறுதியான அடித்தளத்தை அமைக்க வேண்டியது அவசியம்.
தத்துவப் பயணத்திற்கு மூன்று அடிப்படைத் தேவைகள்:
மெய்யியலை வெறும் ‘அறிதல்’ என்பதிலிருந்து ‘உண்மையை உணர்தல்’ என்ற உயர் பயணத்திற்கு இட்டுச் செல்ல, பின்வரும் மூன்று விஷயங்களில் நாம் தயார்நிலையைப் பெற வேண்டும்:
1. துல்லியமான கலைச்சொற்கள் (Precision in Terminology):
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், கருத்தும் திட்டவட்டமான மற்றும் குழப்பமற்ற பொருளைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே தத்துவத் தெளிவுக்கு முதல் படி.
2. பிழையற்ற தர்க்க முறை (Flawless Logic)
நம் வாதங்கள் அனைத்தும் வலுவான காரண-காரிய அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். நம்பகமான, பிழையற்ற தர்க்க முறையே சித்தாந்தக் கருத்துக்களின் உண்மையை நிறுவ உதவும்
3. நம்பகமான அறிவின் அளவைகள்
அறிவைப் பெறும் முறைகள் (பிரமாணங்கள்) நம்பகத்தன்மையுடனும், நுட்பமான தெளிவுடனும் இருக்க வேண்டும். இதன்மூலம் தத்துவக் கருத்தின் அடித்தளம் உறுதியாகும்.
இனி வரவிருக்கும் பகுதிகளில், இந்த அடிப்படைத் தத்துவக் கருவிகளை மிகத் துல்லியமாக வரையறுத்து, அதன் தர்க்கத் தெளிவைப் புரிந்துகொண்ட பிறகு, சித்தாந்தம் கூறும் 36 தத்துவங்களை (உண்மைக் கூறுகளை) நோக்கி நமது ஆய்வை நகர்த்தலாம்.
கலைச் சொற்களின் இன்றியமையாமை (The Importance of Technical Terminology)
சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் (Technical Terminology) அதன் தத்துவத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாதவை. இவை அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சொற்களிலிருந்து வேறுபட்டு, குறிப்பிட்ட நுட்பமான தத்துவக் கருத்துக்களை வரையறுக்கின்றன.
ஒரு சில உதாரணங்கள்:
ஆணவம்: பொது வழக்கில் ‘அகம்பாவம்’ எனப் பொருள்படும், ஆனால் சித்தாந்தத்தில் இது அநாதியான மூல மலத்தைக் குறிக்கும். இதுவே உயிரின் மெய்யறிவை மறைக்கும் திரையாகும்.
மாயை: பொது வழக்கில் ‘தோற்றப்பிழை’ (illusion) எனப் பொருள்பட்டாலும், சித்தாந்தத்தில் இது மும்மலங்களில் ஒன்றான, இந்த உடலையும் உலகையும் படைத்தலுக்குரிய மூலப்பொருள். ஆனால் இது ஒரு சடப்பொருள் (Matter) ஆகும்.
அவஸ்தை: துன்பம் எனும் பொதுவான பொருளிலிருந்து வேறுபட்டு, இது உயிரின் நிலை மாறுபாடுகளை (விழிப்பு, கனவு, உறக்கம் போன்ற நிலைகளை) குறிக்கப் பயன்படும்.
இத்தகைய துல்லியமான வரையறைகள் இல்லாவிட்டால், பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் உண்மை இயல்பையும் அவற்றிற்கிடையேயான தொடர்பையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. எனவே, கலைச் சொற்களை வரையறுக்கப்பட்ட பொருளில் மட்டுமே பயன்படுத்துதல் மற்றும் புரிந்து கொள்ளுதல மிக முக்கியம்.
மேலும் பல சமஸ்கிருதச் சொற்கள் அவை எப்படி உள்ளனவோ அதேவிதமாகவும் சிலவற்றை அவற்றை தமிழ்படுத்தியும் சித்தாந்த தத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நாம் இரண்டு சொற்களையும் தரவிருக்கிறோம்.
பயில்வதற்கான அணுகுமுறை
சைவ சித்தாந்தத்தைப் பயிலும்போது நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் பொதுப் புரிதல்களையும், மரபுசார் கருத்துகளையும் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, இதை ஒரு புதிய கண்டுபிடிப்புக்கான பயணமாக அணுகலாம். வாசிக்கும்போது மனதில் நூற்றுக்கணக்கான கேள்விகள், ஐயங்கள் எழ வேண்டும் – அதுதான் இதன் உண்மையான நோக்கம். இந்தக் கருத்தாக்கத் தொடரை வெறும் வாசிப்புடன் முடித்துக் கொள்ளாமல், நாம் கற்றுக் கொள்பவற்றை நம் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள், மனதின் நுண்ணிய அசைவுகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களோடு கூர்மையாகத் தொடர்புபடுத்தி, அதன் உண்மையான ஆழத்தை உணர்வது மிக அவசியம்.
இத்தகைய திறந்த மனதுடன் கூடிய சுயபரிசோதனையே சைவ சித்தாந்தத்தை வெறும் தத்துவப் படிப்பாக (Theory) அல்லாமல், உயிர்ப்புள்ள வாழ்வியல் நெறியாக (Way of Life) அனுபவப்பூர்வமாக உணர நமக்கு உதவும்.
இது யாருக்கான கல்வி? சமய நம்பிக்கையாளருக்கானதா?
சைவ சித்தாந்தத்தைக் கற்றுக்கொள்ள ஒருவர் கண்டிப்பாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவராகவோ, அல்லது சிவபெருமான் மேல் தீவிர நம்பிக்கை கொண்டவராகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்தச் சமயத்தைப் பின்பற்றுபவராக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நம்பிக்கை என்பது கட்டாயமான தேவை அல்ல.
ஆனால், இதற்குத் தேவைப்படுவது ஒன்றுதான்: ஒரு விஞ்ஞானியைப் போன்ற கூர்மையான அவதானிக்கும் திறன் (Keen Observation) மற்றும் ஒரு திறந்த ஆய்வுக் கண்ணோட்டம். சைவ சித்தாந்தம் ஒரு அறிவார்ந்த, தத்துவக் கட்டமைப்பு என்ற அளவிலே மட்டும் பார்த்தால்கூட, அது வியக்க வைக்கும் ஆழத்தையும், உயிரின் , உலகின் இயக்கத்தைப் பற்றிய நுணுக்கமான விளக்கங்களையும் கொண்டது. இதை முதலில் ஒரு ஞானத் தேடலாக (Intellectual Quest) அணுகலாம்.
அப்படியென்றால் இது வெறும் அறிவா? இல்லை அனுபவமாக உணர்ந்துவிட முடியுமா?
அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்வது என்பது, இந்தக் கட்டிடத்தின் நுழைவாயிலில் நிற்பது போன்ற ஆரம்பப் படிநிலை மட்டுமே.
சைவ சித்தாந்தம் முன்வைக்கும் மேலான உண்மைகளை ஒருவர் நிச்சயமாக, திட்டவட்டமான அனுபவமாக உணர முடியும். அதற்கான தெளிவான மற்றும் படிப்படியான வழிமுறைகளும் இதனுள் பொதிந்துள்ளன.
நீங்கள் படிக்கும் கோட்பாட்டை, உங்கள் மனதின் அலைக்கழிப்புகளில், வெற்றியின் மகிழ்ச்சியில், தோல்வியின் துயரில் சோதித்துப் பாருங்கள்..வாசிக்கும் ஒவ்வொரு வரிக்குள்ளும், “இது உண்மையா? அப்படியானால் என் வாழ்வில் இதன் தாக்கம் என்ன?” போன்ற தீவிரமான கேள்விகள் கொந்தளித்து எழ வேண்டும். அப்போது, இது வெறும் பழங்காலத்து ஞானமாக அல்லாமல், உங்களை விடுதலையை நோக்கி இட்டுச் செல்லும் ஆற்றல் மிக்க உண்மையாக உயிர்த்தெழும்.
உண்மை உணரப் பயன்படுத்தும் அளவைகள் (Pramāṇas / Means of Knowledge)
நாம் ஒரு ஸ்தூலமான பொருளின் பரிமாணங்களை அளக்க ( உதாரணமாக ஒரு மேசையின் அளவை அளக்க ) சில கருவிகளை பயன்படுத்துவது போல ஒரு சூட்சுமமான தத்துவக் கருத்தின் உண்மையை நிலைநாட்டவும் அல்லது மறுதலிக்கவும் சில அடிப்படை அளவுகோள்கள் தேவை. இந்த அளவுகோள்களே அளவைகள் அல்லது பிரமாணங்கள் (Pramāṇas) என்று அழைக்கப்படுகின்றன. ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாயம் (Nyāya), அளவை இலக்கணங்களையும் தர்க்கத்தின் அடிப்படைகளையும் மிக விரிவாக விவரிக்கிறது. இந்திய ஞான மரபில் நடந்த அனைத்து விவாதங்களும் இந்த அளவை இயல் மற்றும் தர்க்க சாஸ்திரத்தின் அடிப்படையிலுமே நடைபெற்றன.
சைவ சித்தாந்தம் உட்படப் பல தத்துவப் பிரிவுகளும் இந்த நியாய மரபைப் பின்பற்றி, மூன்று முக்கிய அளவைகளை ஏற்றுக்கொள்கின்றன.
அவை பிரத்யட்சம் , அனுமானம் , ஆகமம் அல்லது ஸ்ருதி எனப்படும்.
1. காட்சி அளவை (பிரத்யட்சம்/ Direct Perception)
சமஸ்கிருதப் பெயர்: பிரத்யட்ச பிரமாணம் (Pratyakṣa).
இது ஐம்புலன்கள் அல்லது உள்மனத்தால் நேரடியாக அறிதல் (Direct Perception) ஆகும். அதாவது, அனுபவப்பூர்வமாக ஒரு பொருள் இருப்பதை நாம் உணர்வது.
‘காட்சி’ என்கிற வார்த்தையால் கண்களால் மட்டும் காண்பது எனத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. ஐம்புலன்களால் உணரப்படும் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய அனைத்துமே ‘காட்சி’ எனும் வார்த்தையால் சுட்டப்படுகின்றன.
உலகப் பொருள்கள் மற்றும் அன்றாட அனுபவத் தன்மைகளை அறிவதற்கு இதுவே முதன்மை அளவையாகப் பயன்படுகிறது.
பிரத்யட்ச பிரமாணத்தின் நான்கு வகைகள்:
நம் ஆன்மா அல்லது உயிர், ஐம்புலன்களின் வழியாக உலகை அறிகிறது. இவை அறிதல் கருவிகள் (ஞான இந்திரியங்கள்) என அழைக்கப்படுகின்றன. செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகிய இவ்வைந்தும் மனம் என்கிற உள் கருவியுடன் இணைக்கப்பட்டு, ஆன்மா அதன்மூலம் உலகை நுகர்கிறது. ஒரு கம்ப்யூட்டரின் இன்புட் கருவிகள் போல என இதைப் புரிந்து கொள்ளலாம். இந்த உளவியல் புரிதலோடு நான்கு வகை காட்சி அளவைகளைப் புரிந்துகொள்வது அவசியம். வெளி உலகத் தகவல்கள் மனத்தின் வழியாக உயிருக்குச் செல்லும் படிப்படியான வழிமுறையை இவை விளக்குகின்றன.
(i) வாயில் காட்சி (அ) இந்திரியக் காட்சி (Nirvikalpa Pratyaksha)
இது புலன்களின் வாயிலில் (நுழைவு இடத்தில்) நேரடியாக நடக்கும் ஆரம்பகட்ட உணர்வு ஆகும். உதாரணமாக, கண்ணுக்கு ஏதோ ஓர் ஒளி தெரிகிறது அல்லது காதில் ஏதோ ஒரு சப்தம் விழுகிறது என்ற பொதுவான அளவில் மட்டுமே இவை கருவிகளில் சேகரிக்கப்படுகின்றன.
நிலை: இங்கே உணர்வுகள் பிரித்து உணரக்கூடிய நிலையில் இல்லாமல், பொதுவாக உணரும் தன்மையில் மட்டுமே உள்ளது.
பெயர்: இதை நிர்விகல்பக் காட்சி (பிரித்து அறியப்படாத காட்சி) என்று அழைப்போம். இதற்கு அடுத்த நிலையில் தான் மனமும் புத்தியும் ஒருங்கிணைந்து அந்தத் தகவலுக்கு ஓர் அர்த்தத்தைத் தருகின்றன.
(ii) மானதக் காட்சி (Mental Perception / Savikalpa Pratyaksha)
இந்த நிலையில், இந்திரியங்கள் வாயிலாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மனம் மற்றும் புத்தி வழியாக அவற்றின் இயக்கத்துக்கு உட்பட்டுப் பகுத்து அறியப்படுகின்றன.
1. செயல்பாடு: ஒரு பறவையின் குரலைக் கேட்கும்போது, காது அந்தத் தகவலை மனத்துக்குத் தருகிறது. மனம் ஏற்கனவே தன்னிடமிருக்கும் பதிவுகளை வைத்து ஒப்பிடுகிறது. புத்தி அதை வைத்துப் பெயர், இனம், குணம், தொழில் ஆகியவற்றை ஆராய்ந்து, “அது மயில் அகவல்” என தீர்மானிக்கிறது.
2. பெயர்: இந்த பகுத்து உணரப்பட்ட உணர்வைச் சவிகல்பக் காட்சி (பிரித்து உணரப்பட்ட காட்சி) என்று அழைப்போம். (இப்படி முடிவெடுக்க முடியாமல் சந்தேகமுறும் காட்சி ஐயக்காட்சி என்றும், ஒன்றை இன்னொன்றாகத் தவறாகப் புரிந்துகொள்ளும் காட்சி விபரீதக் காட்சி என்றும் அழைக்கப்படும்.)
இந்த இரண்டு படிநிலைகளும் நம் அன்றாட வாழ்வில் மின்னல் வேகத்தில் நிகழ்வதால், அவற்றைப் பிரித்து அறிவது கடினம். எனினும், ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவர்கள் அல்லது மன அழுத்தப் பிரச்சினையில் இருப்பவர்கள் இந்த அனுபவத்தை உணர்ந்திருப்பார்கள். உதாரணமாக, ஒருவர் மிகுந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது அல்லது வேறொரு செயலில் தீவிரமாக ஒருமைப்பட்டிருக்கும்போது, புலன் வழியே அவர் பெறும் தகவல்கள் (சப்தம், பார்வை, தொடுதல் போன்றவை) நிர் விகல்பக் காட்சியாகவே நின்றுவிடுகின்றன. நம் அன்றாட அனுபவத்தில் இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறோம்.
ஏன் அவ்வாறு நிகழ்கிறது?
1. இந்திரியங்கள் தகவலைப் பெறுகின்றன (சேகரிப்பு): ஐம்புலன்களாகிய கருவிகள் வெளி உலகிலிருந்து வரும் தகவல்களைச் சேகரித்து, அவற்றை உள் கருவியான மனத்துக்கு அனுப்புகின்றன. இந்தச் சேகரிப்புப் பணி எந்தத் தடையுமின்றி நடந்தேறுகிறது. இதுவே நிர் விகல்பக் காட்சி ஆகும்.
1. மனம் இணைவதில்லை (Uncoupling): ஓர் உயிர் அறிவை உணர்வதற்கு, வெளிப் புலனும் (இந்திரியம்), உள் மனமும் , புத்தியும் இணைந்து செயல்பட வேண்டும். ஒருவன் வேறு சிந்தனையில் தீவிரமாக ஆழ்ந்திருக்கும்போது, மனம் அந்தப் புதிய இந்திரியத் தகவலுடன் இணைவதற்கு மறுக்கிறது.
2. பகுத்தறிவு தடைபடுகிறது: மனம் தகவலை ஏற்காததால், புத்தி அந்தத் தகவலை எடுத்துக்கொண்டு, அதன் பெயர், குணம், பொருள் ஆகியவற்றைப் பகுத்து அறியும் சவிகல்பக் காட்சி என்னும் செயல்பாடு நிகழாமல் நின்றுவிடுகிறது.
நீங்கள் ஆழ்ந்த சிந்தனையுடன் சாலையில் நடந்து செல்லும்போது, உங்களை யாரோ ஒருவர் சத்தமாகப் பெயர் சொல்லி அழைத்திருக்கலாம். அந்தச் சப்தம் உங்கள் காதில் விழுந்திருக்கும் (நிர் விகல்பக் காட்சி நிகழ்கிறது), ஆனால் உங்கள் கவனம் மனத்தின் வேறொரு விஷயத்தில் பிணைந்திருந்ததால், “இது என் நண்பரின் குரல்,” அல்லது “இது என்னை அழைக்கும் வார்த்தை” என்ற பொருள் (சவிகல்பக் காட்சி) உங்கள் உணர்வுக்கு வரவில்லை. உங்களைத் தொடும் உணர்வு கூடத் தொடர்பு படாமல் போகும் அனுபவம் பலருக்கும் இருக்கலாம்.
(iii) தன் வேதனைக் காட்சி
இங்கு ‘வேதனை’ என்ற சொல்லுக்கு, ‘உணர்ச்சி’ அல்லது ‘அனுபவம்’ (Feeling/Experience) என்று பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக நாம் பயன்படுத்தும் ‘துன்பம்’ (Suffering) என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்துகொள்வது தவறு.
மானதக் காட்சியின் (சவிகல்பக் காட்சியின்) மூலம் பிரித்து அறியப்பட்ட தகவல், நம் ஆன்மா அல்லது உயிருக்குள் அதற்குத் தக்க ஒரு உணர்ச்சியை (இன்பம்/துன்பம்/விருப்பம்/வெறுப்பு) உருவாக்கும். இந்த உணர்வுச் சுழற்சியே தன் வேதனைக் காட்சி எனப்படுகிறது.
பதிவுகளின் தாக்கம் (The Role of Patterns): இந்த உணர்வுகள் வெறுமனே நிகழ்வதில்லை. மாறாக, நம் மனம் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் விருப்பு, வெறுப்பு ஆகிய எண்ணற்ற பதிவுகளுக்கு (Patterns or Vāsanās) ஏற்பவே வெளிப்படும் உணர்வுகளும், எதிர்வினைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.
உதாரணம்: நமக்கு பிடிக்காத ஒரு நபர் மிகச் சரியான நல்விஷயங்களைக் கூறினாலும், அவருடைய முந்தைய பதிவின் காரணமாக நமக்குள் ஒரு எதிர்ப்புணர்ச்சி தோன்றுவது.
அதேபோல, நமக்கு பிடித்த நபர் ஏதேனும் தவறான விஷயங்களைக் கூறினாலும், அந்த நபர் மீதான பதிவினால், நாம் அதை பெரிதுபடுத்தாமல் இருப்பதும் நிகழ்கிறது.
உண்மையில், நம்முடைய இந்த உணர்ச்சி எதிர்வினைகள் என்பவை, புதிய முடிவுகள் அல்ல; அவை ஏற்கெனவே பதிந்துவிட்ட பழைய மனப் பதிவுகளின் ஒரு தொகுப்பு (Bundle of Reactions to the existing pattern) மட்டுமே. இந்த தன் வேதனைக் காட்சியின் செயல்பாட்டை நாம் உணர்ந்து, பதிவுக்கும் எதிர்வினைக்கும் இடையில் உள்ள அந்தச் சிறிய இடைவெளியைக் காணும்போது, அந்த உணர்ச்சிப் பிணைப்பு உடைகிறது. இந்த நிலையிலேயே, நாம் ஒருவிதமான மனச் சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்குகிறோம்.
(iv) யோகக் காட்சி (Yogic Perception)
இது பிரத்யட்சப் பிரமாணத்தின் (காட்சி அளவையின்) நான்காவது மற்றும் உயர்ந்த நிலையாகும்.இதற்கு முன்னர் நாம் கண்ட முதல் மூன்று காட்சிகளும், மனம் மற்றும் ஞானேந்திரியங்கள் போன்ற கருவிகளின் வழியாகவே உயிர் உலகை உணரும் வழிமுறைகள் ஆகும். ஆனால், யோகக் காட்சி என்பது, இந்தக் கருவிகளின் துணையின்றி, உயிர் தானாகவே உணரும் காட்சியே ஆகும்.
உயிர் (ஆன்மா) அறிவுப் பொருள் மற்றும் வியாபகத் தன்மை (சர்வவியாபகமான இயல்பு) உடையது. சாதாரண நிலையில், மும்மலங்களால் பிணிக்கப்பட்டு, கருவிகளின் எல்லைக்குள் சுருங்கியே உணர்கிறது.
சைவ சித்தாந்தம் காட்டும் நான்கு பாதைகளில் ஒன்றான யோகப்பாதையின் அட்டாங்க யோகத்தின் வழியாக, மும்மலங்களின் வலிமையை நீக்கி, அதன்மூலம் யோகத்தின் இறுதி நிலையான சமாதி நிலையில் உயர் ஞானத்தை அடைந்த ஆன்மா, இந்தக் காட்சியை அடைகிறது.
இந்த நிலையில், ஆன்மா கருவிகள் துணையேதும் இன்றி, காலம், இடம் (தேச-கால வரம்பு) ஆகியவற்றைக் கடந்து, வியாபித்து, முழுமையாக அறியும் தன்மையைப் பெறுகிறது.
கேட்பதற்கு இது, ஏதோ மாயாஜால கதை போலத் தோன்றலாம். ஆயினும், இந்த விளக்கங்கள், ஞானத்தை அனுபவமாகத் தரிசித்த ஆசான்களின் மரபிலும், யோகிகளால் மீண்டும் மீண்டும் அடையப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும் உறுதி செய்யப்படுகின்றன. இந்திய ஞான மரபின் ஆயிரக்கணக்கான ஆண்டு யோக அனுபவங்களின் அடிப்படையில், இது அடையக்கூடிய ஒரு உண்மை நிலை என்றும், உண்மையை உள்ளவாறு காணும் தரிசனம் என்றும் ஆணித்தரமாக சொல்லப்படுகிறது. இதுவே, சித்தாந்தக் கொள்கைகளை ஸ்தாபிக்கப் பயன்படும் ஆகமப் பிரமாணத்தின் அடிப்படை ஆதாரமாகவும் விளங்குகிறது.
2. கருதல் அளவை ( அனுமானம் / Inference)
சமஸ்கிருதப் பெயர்: அனுமான பிரமாணம் (Anumāna).
இது அறியப்பட்ட உண்மையிலிருந்து காணப்படாததை ஊகித்தறிதல் (Inference) அல்லது தர்க்கிக்கும் முறை ஆகும். இது காரண காரிய தொடர்பின் (Cause and Effect) அடிப்படையில் அறிவை அடைவது.
உதாரணமாக மலையில் இருக்கும் புகையாகிய விளைவைக் (Effect) கொண்டு, அங்கே நெருப்பு இருக்கக்கூடும் என்ற காரணத்தை (Cause) அனுமானித்து அறிவது. இது தன் பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம் என இருவகைப்படும்.
புலப்படாத சூக்குமப் பொருள்களின் இருப்பை (பதி, பசு, பாசம் -( இறைவன், உயிர், தளை) ) அவற்றின் விளைவுகளை, செயல்பாடுகளைக் கொண்டு தர்க்கரீதியாக நிறுவுவதற்கு இது பயன்படுகிறது.
3. ஆகம அளவை (Agama )
சமஸ்கிருதப் பெயர்: ஆகமம் அல்லது ஸ்ருதி (Āgama / உரை அளவை).
இது ஞானத்தை அனுபவமாகத் தரிசித்து உணர்ந்த (யோகக் காட்சி) மூலத்திலிருந்து (சாத்திரங்கள் அல்லது வழி வழியாக வந்த குரு மரபின் செவி வழி உபதேசம்) அறிவைப் பெறுதல் ஆகும். யோகக் காட்சி வழியாகத் தரிசனம் பெற்ற குருவின் வார்த்தைகளே ஆகமப் பிரமாணம் என முன் அறிவாய் கொள்ளப்படுவது வழக்கம்.
சைவ சித்தாந்தத்தின் பிரமாண நூல்களாக நான்கு வேதங்களைப் பொது எனவும் 28 ஆகம நூல்களைச் சிறப்பு எனவும் கொள்வது மரபு.
ஆகமப் பிரமாணம் மூன்று பிரிவுகளாகச் செயல்படுகிறது:
தந்திர உரை அளவை: கர்ம காண்டத்தில் சொல்லப்படும் சரியை கிரியைகளை (சடங்குகள்) பின்பற்றும் முறை.
மந்திர உரை அளவை: உபாசனா காண்டத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை அறிந்து கொள்வது.
உபதேச உரை அளவை: ஞான காண்டத்தில் சொல்லப்படும் பதி, பசு, பாசங்களின் உண்மை இயல்பை தான் உணருமாறும் பிறர்க்கு உணர்த்துமாறும் அறிவது.
காட்சி, கருதல் அளவைகளுக்கு எட்டாத, அளவைக்கு அப்பாற்பட்ட (Transcendental) தத்துவ உண்மைகளை அறிவதற்கும், சித்தாந்தத்தின் இறுதி முடிபுகளை உறுதி செய்வதற்கும் இது அடிப்படையாக உள்ளது. இவை தவிர மேலும் பல பிரமாணங்கள் (உபமானம், ஐதீகம்,அர்த்தாபத்தி போன்றவை) இருந்தாலும், அவை அனைத்தும் இந்த மூன்றுக்குள் அடங்குவதாகக் கருதி, சைவ சித்தாந்தம் இந்த மூன்று அடிப்படைப் பிரமாணங்களையே தன் ஆய்வுக்கு ஏற்றுக்கொள்கிறது.
நாம் அடுத்து முப்பொருள் உண்மைகளை இன்னும் சிறிது ஆழமாக ஆராய்வோம்.
என்றும் உள்ள மெய் பொருள்களை “சத்” என்று குறிப்பிடுவோம். இந்த வார்த்தைக்கு உண்மை என்று பொருள். பதி, பசு, பாசம் இம் மூன்றுமே அநாதி ( தொடக்கமற்ற) யான உண்மைப் பொருள். இவை மூன்றுமே சூக்குமமானவை.
அறிவுள்ள பொருளை “சித்” என்று குறிப்பிடுவோம்.
அறிவற்ற ஜடப்பொருளை “அசித்து ” என்று குறிப்பிடுவோம்.
பதி – முற்றறிவுப் பொருள். தானே அறியும் அநாதி முத்த சித்துரு.
பசு – சிற்றறிவுப்பொருள். தானே அறியாது. அறிவித்தால் மட்டுமே அறியும்.
பாசம் – அறிவற்ற ஜடப்பொருள். அறிவித்தாலும் அறியாது.
சைவ சித்தாந்தத்தில் அதன் மையப் பொருளான பதி (இறைவன்), வெறும் நம்பிக்கையாலோ, அல்லது புராணக் கதைகளாலோ நிலைநிறுத்தப்படுவதில்லை.
புராண கதைகளையும் செவி வழியான கடவுளர் கதைகளையும் மனதில் கொண்டு சித்தாந்த தத்துவத்தை குழப்பிக்கொள்ளக்கூடாது. மாறாக, அது காட்சி, கருதல், ஆகமம் என்ற மூன்று தத்துவ அளவைகளைக் (Pramāṇas) கொண்டு தர்க்கரீதியாக அறிவு பூர்வமாக நிலைநாட்டப்படுகிறது.
புராணங்கள் இறைவனின் சகள நிலையின் (உருவ நிலை) ஆடல்களை பக்திப் பெருக்கிற்காகக் கதைகளாக விவரிக்கின்றன. ஆனால் சித்தாந்தம், இறைவன் ஏன் படைக்கிறார், ஏன் மறைக்கிறார் போன்ற தொழில்களை உயிர்களின் முக்திக்காவும் மல நீக்கத்திற்காகவும் நிகழ்த்தும் அருள் செயலாக மட்டுமே பார்க்கிறது. இங்கே, இறைவனின் வடிவம் அல்லது செயல் குறித்த எந்தவிதமான விவாதமும் அளவைகள் மற்றும் அத்துவிதத் தொடர்பு என்ற சட்டகத்திற்குள்ளேயே நிகழ்கிறது.
இறைவன் புலன்களுக்கு எட்டாத சூக்குமப் பொருள் (Subtle Reality) என்பதால், அவரது இருப்பை எப்படி ஏற்றுக்கொள்வது?
இந்த முடிவில்லாமல் விரிந்து கிடக்கும் உலகப் பொருளனைத்தும் சடப்பொருள்கள்; அவை தாமாகத் தோன்றவோ, செயல்படவோ, தாமாக ஒடுங்கவோ முடியாது
ஆனால் உலகில் உள்ள பொருள்கள் யாவும் தோன்றி, நின்று, அழிகின்றன என்பதைக் காண்கிறோம். எவை உண்டாகின்றனவோ அவை விளைவுகள் (effect) . அவற்றுக்குக் காரணம் என ஒன்று (Cause) இருக்க வேண்டும்.
நீங்களோ, நானோ அல்லது வேறு எந்த உயிர் பொருளும் இவற்றை நிகழ்த்தவில்லை. சடப்பொருள்கள் தாமாக இயங்காததால், இவற்றைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்து, இயக்க வல்ல முழு அறிவும் முழுச் செயலும் கொண்ட ஒரு தலைவன் (பதி) கட்டாயம் இருக்க வேண்டும்.
இறைவன் நேரடியாகப் புலன்களுக்கு எட்டுபவர் அல்லர் என்றாலும், அவரது இருப்பை நாம் தன்னனுபவக் காட்சியால் (யோகக் காட்சி) உணர முடியும்.
உயிர் (பசு) (சதசத்து )அறிவிக்க அறியும் தன்மை உடையது. அது பாசத்தோடு கூடும்போது, தான் பாசம் என அடையாளப்படுத்திக் கொள்ளும். பதியோடு கூடும்போது, பதியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும். இதை சார்ந்ததின் வண்ணமாதல் என்போம். உதாரணமாக தான் வைத்திருக்கும் ஒரு வாகனத்தின் மேல் தீவிர பற்றிருக்கும் ஒருவருக்கு அதில் சிறு கீறல் பட்டாலும் பெரும் உணர்ச்சி வசப்படுவதைப் பார்த்திருக்கலாம். இப்போது அவர் அந்த வாகனத்தோடு ஒட்டி தன் ஆத்மாவை அடையாளப் படுத்திக் கொள்கிறார்.
மலங்கள் விலகி, ஞான மார்க்கத்தில் நிற்கும் ஆன்மா, கருவிகளின் துணையின்றி, தன் அறிவினால் இறைவனின் பேரானந்தத்தை (வரம்பில்லாத இன்பம் உடைமை) நேரடியாக அனுபவிக்க முடிகிறது. இந்த அனுபவமே, கண்ணால் காணப்படாத இறைவனின் இருப்பை, உயிரின் அனுபவக் காட்சியால் உறுதிப்படுத்துகிறது. ஆழ்நிலை தியானத்தை பயிற்சி செய்பவர் தற்காலிகமாகவாவது பாசமலம் மட்டுப்பட்டு சைதன்யஸ்வரூபமாக உயிர் இருப்பதை உணர முடியும். அதைத் தாண்டிய இறை அனுபவங்களும் சாத்தியமே.
யோக நிலையின் மூலம் உயிரால் உணரப்படும் (அனுபவிக்கப்படும்) ஆனந்தமே, அநாதி முத்த சித்துருவாகிய இறைவனின் இருப்பை உறுதி செய்கிறது.
காட்சிக்கும் கருதலுக்கும் எட்டாத இறைவனின் உண்மை இயல்பை அறிவதற்கு, ஆகமங்களே இறுதிப் பிரமாணமாகின்றன.
காட்சி, கருதல் அளவைகளால் நிரூபிக்க முடியாத அளவைக்கு அப்பாற்பட்ட (Transcendental) உண்மைகளை, ஞானியர் தரிசித்து அருளிய சாத்திரங்களின் வழியாகவும் ஆகமங்கள் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். அதை அனைவரும் அடைவதற்கான வழி முறைகளும் இருக்கின்றன.
சிவத்தின் இரண்டு நிலைகள்
பதி
பதிக்கு இரண்டு நிலைகள் உண்டு என்கிறது சித்தாந்த சைவம்,
1. சொருப நிலை
2. தடத்த நிலை
1. சொரூப நிலை (Svarūpa )
இது இறை தன்மையின் உண்மை நிலை (Intrinsic Nature) ஆகும். இந்த நிலையில் இறைவன், எல்லாத் தத்துவங்களையும் கடந்தவராகவும் , தூய ஞானமாகவும் (Ultimate Conciousness) விளங்குகிறார். நமக்கு இருக்கும் மனம் மற்றும் புத்தியால் பற்ற முடியாத நிலை. இது அருவ நிலை என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அனைத்தையும் கடந்த ஒரு நிலை. இந்த நிலையில், இறைவன் எந்தவிதமான தொழிலையும் செய்யாமல், எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருளாய் விளங்குகிறார்.
ஸ்வரூப நிலையில் இறைவருக்கு பெயரோ வடிவோ எந்த குணங்களையும் சேர்க்க முடியாது. ஆகவே இறையை எந்த பெயரால் நீங்கள் வணங்கினாலும் நீங்கள் வணங்குவது சொரூப நிலை பதியையே.
சொரூப நிலை இறைத் தன்மையை சைவ சித்தாந்தம் பரசிவம் (மேலான சிவம்) என்றழைக்கிறது. பரசிவத்தின் சக்தியை பராசக்தி என்று அழைக்கிறது.
2. தடத்த நிலை (Functional State)
இது உயிர்களுக்கு அருளும் பொருட்டு சொரூப சிவத்தின் ஆற்றல் இறங்கி வந்து தத்துவங்களோடும், தொழில்களோடும் கூடிய நிலை ஆகும். இந்த நிலையில் இருந்தே இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழில்களைச் செய்கிறார்.
தடத்த நிலையில், சிவம் மூன்று வகை வடிவங்களைக் கொண்டு தொழிலாற்றுகிறார் 1. அருவம் 2. அரு உருவம் 3. உருவம்.
அருவ நிலை : உலகைத் தோற்றுவிக்கும் ஆற்றலாக (சத்தியாக) மட்டும் விளங்குவது. ( நாதம், விந்து என முதலிரண்டு தத்துவங்களாகும். பின்னே விரிவாகக் காண்போம்)
அருவுருவ நிலை : அருவத்திலிருந்து உருவ நிலைக்கு செல்லும் முன்பான உருவமும் அருவமும் கலந்த நிலையில், உலகத் தொழில்களைச் செய்வதற்கு ஆதாரமாய் இருப்பது. (சதாசிவ தத்துவம், இலிங்க வடிவம்)
உருவ நிலை : உயிர்களுக்கு அருளும் பொருட்டு, உருவாக தொழிலாற்றுவது (உதாரணம்: மகேசுவர வடிவங்கள்) .
முப்பத்தாறு தத்துவங்களின் முதல் பகுதியான சிவதத்துவங்கள் ஐந்தும் தடத்த நிலை சிவத்தையே விவரிக்கின்றன.
பசு
உயிரின் இருப்பு அதாவது நமது இருப்பு பற்றி நாம் அன்றாட பிரத்யட்ச அனுபவத்தில் (நேரடிப் பார்வையில்) தெளிவாக அறிவோம். ஆனால், அதன் உண்மை இயல்பு என்ன?
உயிர் என்பது வெறும் உடலா? அல்லது மனமா? அல்லது இவை இரண்டையும் கடந்து இயங்கும் வேறொன்றா? — இந்த அடிப்படை வினாக்களுக்கான அனுபவபூர்வமான தெளிவு இன்றி இருக்கலாம்.
இவற்றுக்கான தீர்வைப் பெறவே, நாம் இனி காணவிருக்கும் சைவ சித்தாந்தம் கூறும் 36 தத்துவங்கள் (உண்மைக் கூறுகள்) வழியே, உயிரின் தன்மையைத் (Identity of the Soul) தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
இப்போது சைவ சித்தாந்தம் கூறும் உயிரின் மூன்று அவத்தை நிலைகளை பார்க்கலாம். உயிர் என்ற வார்த்தை சித்தாந்தத்தில் ஆன்மா என்ற வார்த்தையால் குறிப்பிடப்படும். நாம் புரிதல் கருதி இரண்டு வார்த்தைகளையும் ஆங்காங்கே பயன்படுத்துவோம்.
ஆன்மாவின் மூன்று நிலைகள்
சித்துப் (அறிவுப்) பொருளுக்கு மூன்று அடிப்படை சக்திகள் உண்டு.
1. இச்சை – ஆசை
2. கிரியை – செயல்
3. ஞானம் – அறிவு
ஆணவ மலத்தின் பிணைப்பால் உயிர் (பசு) தன் அறிவு, இச்சை, கிரியை ஆகியவற்றைப் பயன்படுத்தி அனுபவிக்கும் மூன்று அடிப்படை நிலைகள் இவை:
1. கேவல நிலை
- இது ஆன்மா ஆணவ மலத்தால் மட்டும் பிணைக்கப்பட்டு, மற்ற இரு மலங்களின் (கன்மம், மாயை) தொடர்பில்லாமல் கிடக்கும் நிலை.
- ஆணவ மலத்தின் ஆவாரக சக்தி (மறைக்கும் ஆற்றல்) உயிரின் அறிவை முற்றிலுமாக மறைத்து வைத்திருப்பதால், உயிர் தன் அறிவை இழந்து, முழுமையான அறியாமையில் (இருளில்) ஒரு கல்லைப் போல அசைவின்றி மூழ்கிக் கிடக்கும்.
2. சகல நிலை
- இது இறைவன் திருவருளால், ஆணவ மலத்தின் மறைப்பைப் போக்க, உயிர் மும்மலங்களோடும் (ஆணவம், கன்மம், மாயை) கூடி, உடம்பையும் கருவிகளையும் பெற்று உலகத்தில் வாழும் நிலை.
- மாயை தந்த தனுகரணங்கள் (தனு – உடல்; கரணம் – கருவிகள்)மூலம் உயிர் சிற்றறிவைப் பெற்று, கன்மத்தை நுகர்கிறது. ஆணவத்தின் அதோநியாமிகா சக்தி காரணமாக, உயிர் விருப்பு வெறுப்புகளுக்கும் (Rāga-Dvēṣam) ஏழு குறைகளுக்கும் (பின்னால் விவரிப்போம்) உட்பட்டு அலைக்கழிகிறது. இதுவே நாம் இப்போழுது அனுபவிக்கும் பிறப்பு, இறப்பு நிலைகள் அடங்கிய வாழ்வாகும்.
3. சுத்த நிலை
- இது இறைவன் திருவருளினால் உயிர் மும்மலங்களின் தொடர்பிலிருந்து நீங்கி முக்தி அடையும் நிலை.
- உயிர் தனது அணுத்தன்மையை (அறியாமையை) நீக்கி, சிவஞானத்தைப் பெற்று, இறையுடன் அத்துவிதமாய் (இரண்டறக் கலந்து) இணைந்து பேரின்பத்தை (ஆனந்தத்தை) அனுபவிக்கும். ஆணவ மலம் இதில் அந்தர்பாவித சக்தியாக (இருந்தும் செயலற்று) இருக்கும்.
பாசம் : ஆணவமலம்
சைவ சித்தாந்தம், உயிர்களின் ஆன்மீக விடுதலைப் பயணத்தைத் தடுக்கும் மூன்று அடிப்படை “மலங்களைப்” (பாசம் – பிணைப்புகள்) பற்றிப் பேசுகிறது. அவை:
- ஆணவம் (Āṇava Malam): அநாதியே (தோற்றமில் காலந்தொட்டு) உயிரோடு இணைந்து நிற்கும் மூல அறியாமை (இருள்).
- கன்மம் (Karma Malam): உயிரின் செயல் பிணைப்புகள் (வினைப் பயன்கள்).
- மாயை (Māyā Malam): உடல், கருவிகள்,உலகம், அனுபவம் (தனுகரணபுவனபோகம்) ஆகியவற்றைத் தரும் சடப்பொருள். இந்த மூன்று மலங்களைப் பற்றியும் சிறிது ஆழமாகக் காண்போம். மலம் என்றால் மாசு அல்லது குற்றம்.
இவற்றுள், ஆணவ மலமே மற்ற இரண்டு மலங்களும் உயிரைச் சார்வதற்குக் காரணமாகும் மூல மலம் ஆகும். இது ஆன்மாவின் இச்சை, ஞானம், கிரியை ஆகிய மூவகை ஆற்றல்களையும் மறைத்து, உயிரைச் சிறுமைப்படுத்தி (அணுத்தன்மை ஆக்கி) முழுமையான சிவஞானத்தை அடைய விடாமல் தடுக்கிறது.
இந்த ஆணவம் என்று உயிரை வந்தடைந்தது? உயிர் என்று இருந்ததோ அன்றே ஆணவம் அதனுடன் இருந்தது என்று சைவசித்தாந்தம் சொல்கிறது. பாசம் என்பது சடப்பொருள். ஒப்பு நோக்க ஆன்மா அறிவுள்ள உயிர் பொருள். ஆனால் அது பாசப்பொருளின் கூறாகிய உடம்பினுள் அகப்பட்டிருக்க வேண்டுமானால் ஆன்மாவுக்குள் ஒரு குற்றம் அல்லது குறை இருக்க வேண்டும். அதுதான் ஆணவமலம், இந்த அருவமும் சடமுமான அறிவற்ற பொருள் , அறிவுடைய ஆன்மாக்களை மறைத்து அதன் ஞானம் மற்றும் செயல்களை நிகழ்வொட்டாத படி தடுத்து அறியாமை என்னும் இருளுக்குள் தள்ளுகிறது. ஆகவே தான் ஆணவத்தை இருள்மலம் என்று அழைப்பார்கள்.
உயிர் என்று உண்டோ அன்றே ஆணவமும் அதனுடன் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஆணவமில்லாத உயிரும், இறை போல தூயதாயிருந்திருக்க வேண்டும். அத்தகைய தூய ஆன்மா ஆணவத்தை நோக்கி செல்லாது. அறிவற்ற ஆணவமும் உயிரை நோக்கி தானாக வர முடியாது. பதி உயிரை ஆணவத்துள் செலுத்தியிருக்க முடியாது. ஆகவே தான் உயிர் ஆணவ மலம் இன்றி இருந்த காலமே இல்லை என்று சித்தாந்தம் நிறுவுகிறது.
ஆணவ மலம் (Āṇava Malam) நெல்லில் உள்ள உமி எப்படி அரிசியை மறைத்து நிற்கிறதோ அது போல அநாதியாய் உயிரோடு ஒன்றாயிருந்து அதன் இயல்பை மறைத்து உயிருக்கு எதிராய் செயல்படும் பிரதிபந்தம். மாயை என்பது நெல்லுக்கு தவிடு போல. தவிடு எப்படி அரிசியின் சொரூபத்தை சிறிதளவு காட்டுகிறதோ அது போல மாயை உயிர்க்கு அதன் உண்மை இயல்பை ஓரளவு காட்டி உணர்த்தும் அறிவுக் கருவிகளைத் தரும். கன்மம் நெல்லில் தோன்றும் முளை போல. முளை தோன்றும் போது அரிசியின் உருவம் விளங்காது போவது போல கன்மமாகிய நல் வினைகளும், தீவினைகளும் செய்யப்படுமிடத்து அதன் விளைவுகளிலும் செயல்களிலும் உயிர் மயங்கி இருப்பதால் ஆன்மாவின் உண்மை வடிவம் விளங்காதிருக்கும்.
பொதுவாக, மாயை தான் அறிவை மறைக்கும் முதன்மைக் காரணி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், சைவ சித்தாந்தம் இந்தக் கருத்தை திட்டவட்டமாக மறுக்கிறது.
சித்தாந்தத்தின் கூற்றுப்படி, ஆணவ மலம் தான் உயிரைப் பிணைக்கும் மூல மலம் (அடிப்படை அழுக்கு). இந்த ஆணவமே உயிரின் அறிவை முற்றிலும் மறைத்து, அதை ஆழமான அறியாமைக்குள் (Ignorance) தள்ளுகிறது.
அப்படியானால், மாயையின் பங்கு என்ன?
சித்தாந்தத்தின் பார்வையில், மாயை என்பது அந்த ஆணவ இருளை நீக்க வந்த சிறு வெளிச்சம் போன்றதுதான். அதாவது, மாயை இருளை உண்டாக்குவதில்லை; மாறாக, அது அறிவைச் சிறிது சிறிதாக வெளிப்படுத்த உதவும் ஒரு சாதனம்.
இந்த நுட்பமான வேறுபாடு ஏன்? சித்தாந்தத்தின் முப்பொருள்களின் உண்மை இயல்பில் இந்த மாறுபாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இனி விரிவாக ஆராய்வோம்.
ஆணவ மலத்தின் முப்பெரும் ஆற்றல் நிலை

சைவ சித்தாந்தத்தின்படி, ஆணவம் (மூல மலம்) ஒன்றே ஒன்றுதான். எனினும், அது தன்னுடைய எல்லையற்ற ஆற்றல்களைப் பயன்படுத்தி, எண்ணற்ற உயிர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.ஆணவ மலம் தன்னுடைய தொழிலைச் செய்யும்போது, அது மூன்று நிலைகளில் செயல்படுகிறது என்றாலும், அதன் பிரதான சக்தி நிலைகள் இரண்டே ஆகும். சித்தாந்த ஆய்வுக்கு இந்த இரண்டு சக்திகளே மிக முக்கியமானவை
ஆவாரக சக்தி (Āvārak Saktī) என்பது சைவ சித்தாந்தத்தில், ஆணவ மலத்தின் (மூல மலம்) இரு பிரதான சக்திகளில் ஒன்றாகும்.
‘ஆவாரகம்’ என்றால் ‘மறைப்பது’ அல்லது ‘சூழ்வது’ என்று பொருள். எனவே, ஆவாரக சக்தி என்பது உயிரின் அறிவை மறைக்கும் ஆணவ ஆற்றல் ஆகும்.
இது உயிரின் இயல்பான ஞான சக்தியை (அறியும் ஆற்றலை) முற்றிலும் மறைத்து, ஆன்மாவை அறியாமையில் ஆழ்த்துகிறது. இந்நிலையில் உயிர் கேவல நிலையில் இருக்கிறது.
ஆணவத்தின் மற்றொரு பிரதான சக்தி அதோநியாமிகா சக்தி (Adhōniyāmikā Śakti) ஆகும். அதாவது, ஆணவம் ஆவாரக சக்தியால் அறிவை முற்றிலுமாக மறைக்கிறது; பின், இறைவன் அருளால் மாயையின் துணை கொண்டு உயிர் சகல நிலைக்கு வரும் போது, அது அதோநியாமிகா சக்தியின் நிலைக்கு நகர்கிறது. இந்நிலையில் ஆணவம் ஆன்மாவை விடுதலை நோக்கி செல்ல விடாமல் உலகப் பற்றுகள் , இன்பதுன்பங்கள் நோக்கி கீழே இழுக்கிறது.
அதோநியாமிகா சக்தியின் ஏழு உளவியல் வெளிப்பாடுகள்
ஆணவ மலத்தின் அதோநியாமிகா சக்தி (அலைக்கழிக்கும் ஆற்றல்) உயிரின் உடலெடுத்து வாழும் சகல நிலையில் உயிரைச் கீழ்நோக்கிச் செலுத்தும்போது, அதன் விளைவாக மனித மனதில் ஏழு வகையான குறைகள் (தோஷங்கள்) தோன்றுகின்றன. இவை அனைத்தும் மனித உளவியல் பிரச்சினைகளின் ஆதாரமாக விளங்குகின்றன.

ஆணவ மலத்தின் விளைவுகளாக நாம் கண்ட ஏழு குற்றங்களும் அளவுகளில் வேறுபட்டாலும், நம் அனைவருக்குள்ளும் ஓரளவு வெளிப்படுவதை கவனிக்கலாம்.
இந்த ஆணவ வெளிப்பாடுகள் தீவிரமடையும்போது, அவை நவீன உளவியலால் மனநோய் கோளாறுகள் (Psychological Disorders) எனப் பதிவு செய்யப்படுகின்றன.
பண்டைய இந்தியச் சூழலில், பக்தி மற்றும் சரியா-கிரியா நடைமுறைகள் தடுப்பு உளவியல் (Preventive Psychology) போலச் செயல்பட்டுள்ளன:
1. சமூகப் பிணைப்பு: கூட்டுக் குடும்ப அமைப்பு மற்றும் சமூக வாழ்வு, தனிமை மற்றும் அந்நியமாதல் போன்ற நவீன மன அழுத்தங்களுக்கான வாய்ப்புகளைக் குறைத்தது.
2. கோயில்கள் மற்றும் பக்தி: தினசரி பூஜை, திருவிழாக்கள் ஆகியவை கூட்டு உணர்ச்சி வடிகாலாக (Emotional Catharsis) செயல்பட்டன. இசை, பஜனை, கூட்டு வழிபாடு ஆகியவை மன அழுத்தத்தைக் கரைத்தன.
3. சரியா–கிரியா ஒழுக்கம்:
சரியா (சேவை): தன்னலமற்ற சேவை மூலம் மதம் (அகங்காரம்) மற்றும் மமதை போன்ற ஆணவச் செருக்கு மெலியத் தொடங்கியது.
கிரியா (பூஜை/மந்திரம்): ஒழுக்கம் மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவை மோகம் மற்றும் கவலை போன்ற அலைக்கழிப்புகளைத் திறம்படக் கட்டுப்படுத்தின.
சித்தாந்தத்தின் பார்வை: சிகிச்சைக்கும் விடுதலைக்கும் உள்ள வேறுபாடு
ஆணவ மலத்தின் விளைவுகள் உயிர்கள் அனைத்திலும் வெவ்வேறு விதமான நிலையில் உள்ளன. அவற்றைச் சீரமைக்கும் வழியே ஆன்மீகப் பயிற்சியாகும்.
நவீன உளவியல் (சிகிச்சை): இது, கடுமையான அறிகுறிகளான மனப்பயம், மனச்சோர்வு போன்றவற்றைத் தற்காலிகமாகச் சிகிச்சை அளிப்பதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது.
சைவ சித்தாந்தம் (விடுதலை): சித்தாந்தம் இதையும் தாண்டி முழுமையான விடுதலையை இலக்காகக் கொண்டுள்ளது. ஞான மார்க்கம், பக்தி மார்க்கம், யோக மார்க்கம் ஆகியவற்றின் மூலம் ஆணவ மலத்தை கரைத்து மன அமைதி, ஆனந்தம், மற்றும் ஆன்மீக விடுதலையை நிலைநாட்டுவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்காகவே நான்கு பாதைகளை வரையறை செய்கிறது. அதிலும் சரியான யோக முறை இந்த சிக்கல்களிலிருந்து முழுமையான விமோசனம் தர முடியும்.
ஆணவ மலம் முழுமையாக வன்மை குன்றும் போது, இந்த ஏழு வகை குற்றங்கள் நீங்கி, உயிர் இறுதியான விடுதலைப் பயணத்தை மேற்கொள்ள முடியும்.
அடுத்த பகுதியில், ஆணவத்திற்கு அடுத்ததான கன்ம மலம் மற்றும் மாயை பற்றி காண்போம். அதன்பிறகு, மாயையின் காரியங்களாகப் படைக்கப்பட்ட 36 தத்துவங்களுக்குள் ஆழமாக நுழைவோம்
தன் வேதனை காட்சியைக் கவனித்தல்-சுய பயிற்சி முறை
இந்த தொடரில் அவ்வப்போது சில பயிற்சி முறைகள் கொடுக்கபடும். அவை கற்றுக்கொள்பவற்றை அனுபவமாக மாற்றிக்கொள்ள உதவும்.
இதன் நோக்கம்: உங்கள் உணர்ச்சிகள் (வேதனை) உங்கள் பதிவுகளின் விளைவா, அல்லது உண்மையின் விளைவா என அறிதல்.
அடுத்த முறை, யாரேனும் ஒருவர் உங்களைப் பற்றி விமர்சிக்கும்போது அல்லது உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைப் பேசும்போது, நீங்கள் உணர்ச்சிவசப்படுவதற்கு முன், ஒரு கணம் நின்று இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள்:
நில் – கவனி (Stop & Identify ): உங்களுக்குள் எழுந்த எதிர்வினையை (கோபம், எரிச்சல், வருத்தம்) உடனடியாக நிறுத்தி, ‘இது வேதனை’ என்று அடையாளம் காணுங்கள்.
மனப்பதிவுகளை கண்டுபிடித்தல் (Locate the Pattern): இப்போது, இந்தக் கோபம் அவர் பேசிய வார்த்தை காரணமாக வந்ததா, அல்லது அவர் மீது எனக்கு இருக்கும் பழைய எதிர்மறைப் பதிவு காரணமாக வந்ததா? என்று ஆராயுங்கள்.
இடைவெளியை கவனித்தல் (Witness the Gap ): உங்கள் உணர்ச்சியை அந்தப் பதிவிலிருந்து நீங்கள் பிரித்து அந்த இடைவெளியை உணர ஆரம்பிக்கும் போது , உணர்ச்சியால் ஏற்படும் துயரம் குறைய ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த விசாரணை மனப்பான்மையே, இன்ப-துன்பப் பதிவுகளிலிருந்து விடுபட உதவும் முதல் படியாகும். இந்த பயிற்சியை தினசரி வாழ்க்கையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து பாருங்கள்.
சிவம் தோன்றும்



கட்டுரையாளர்: தில்லை செந்தில்பிரபு

தில்லை செந்தில்பிரபு கோவையில் பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பவர். பல்லாண்டுகளாக முறையாக யோகம் பயின்று அதை எளிய முறையில் பலருக்கும் பயிற்ச்சி அளித்து வருகிறார். மேலும் சைவ சித்தாந்தத்தை முறையாக பயின்று அதன்படி ஆனந்த சைதன்ய நிலையம் அமைத்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அதன் வழி முறைகளையும் பின்பற்றி வருகிறார். அதை அறக்கட்டளையாக நிறுவி பல தொண்டுகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
சைவ சித்தாந்தத்தின் மையக் கருவான 36 தத்துவங்கள் குறித்து திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் சித்தாந்தம் எனும் இணைய இதழில் தொடராக எழுதி வருகிறார். அந்த தொடரின் இரண்டவது கட்டுரையானது “36” (இருள்-வெளி-ஒளி) – 2 எனும் தலைப்பில் நவம்பர் மாதம் (2025) வெளியாகி இருந்தது. இது அந்த இணைய கட்டுரையின் தொகுப்பாகும்.


